அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!
எந்தத் தகவல் வேண்டுமானாலும் உடனடியாக கூகுள் ஆண்டவரை கேளுங்கள் என்று விளையாட்டாகச் சொல்லுவார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட உண்மையாகிறதோ என்று வியக்கும் வண்ணமே அதன் செயல்பாடுகள் அமைகின்றன. இன்று கூகுளில் தகவல் தேடுபவர் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 15 கோடிப்பேராம். அதில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் இரண்டு கோடியே 40 லட்சம் பெண்கள் நாள் தவறாமல் இணைய தளங்களைப் பயன்படுத்துவதும், அதில், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை மட்டுமில்லாமல் ஆடை, அணிகலன்கள் குறித்தும் தகவல்களை தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து, செய்தியாளர்களை சந்தித்த கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவரும், மேலாண் இயக்குனருமான ராஜன் ஆனந்தன், இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக கூறினார் .
தற்போது, வீடு, அலுவலகங்களில் இணையவசதி எளிமையாக கிடைப்பதாலும், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதாலும், தங்கள் தேவைகளுக்கு பெண்கள் இணையதளங்களை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
பொதுவாக பெண்கள் இணையத்தில், மின்னஞ்சல் பார்ப்பது, சமூக வலைதளங்களில் பொழுதை கழிப்பது, பாடல்களை டவுன்லோட் செய்வது, வீடியோ பார்ப்பது என்று பட்டியலிடுகிறது ஆய்வு.
பெண்களில் யாரெல்லாம் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதிக பண வசதியுடையவர்களும், இளையோரும் தானாம்.
என்ன தேடுகிறார்கள்?
கூகுள் தேடுபொறியில் பெண்கள் அப்படி என்னதான் தேடுகிறார்கள் என்று ஆய்வு செய்ததில் ஆடைகள், பொருட்களை அடுத்து, உணவு தயாரிப்பது, குழந்தைகளை பேணுவது, முடியை பரிமரிப்பது , சருமத்தை அழகாக வைத்துக்கொள்வது…. போன்றவற்றைதான் அதிகம் தேடுகிறார்களாம்.
அதுவும் தங்களின் செல்போனில் இருந்து பெண்கள் இத்தகைய கேள்விகளை கூகுள் தேடுபொறியில் கொடுத்து அறிந்துக்கொள்வதாக ஆய்வு கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல், இவற்றை மற்ற பெண்களிடம் பகிர்ந்து கொள்வதோடு, அந்த பொருட்களை வாங்க அவர்களுக்கு பரிந்துரைப்பதாக 80 விழுக்காடு பெண்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதாக 25 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
என்ன பார்க்கிறார்கள்?
கூகுளின் இந்த ஆய்வு இத்தோடு நில்லாமல், தனது வீடியோ தளமான யுடியூபில் பெண்களின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்திருக்கிறது. இந்தியாவில் யூடியூபை பயன்படுத்துவோரில், 40 விழுக்காட்டினர் பெண்களாம்.
அதில், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்பட காட்சிகளை பார்ப்பதை தாண்டி, அழகு, ஃபேஷன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, வீட்டை அழகாக வைத்து கொள்வது, சமையல் வீடியோக்கள் தான் அதிகமாக பெண்கள் பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
கூகுள் ஆய்வுகள் ஒருபுறம் இருக்க… தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இணையம் இன்று எல்லோர் உள்ளங்கையிலும் தவழத் தொடங்கிவிட்டது – மாய உலகமான அந்த இணைய உலகம் தனிமனிதனை மட்டுமல்லாது, சமூக மாற்றங்களையும் செய்துள்ளது.
இது அறிவு வளர்ச்சியை நோக்கி இளைய தலைமுறையினரை கொண்டு செல்லும் களமாக இருந்தாலும், இது தவறாகவும், தவறான பயன்பாட்டுக்கும் மடைமாற்றிச் சென்றுவிடக்கூடாது என்ற ஒரு அச்சமும் ஒருபுறம் நிலவவே செய்கிறது.
எனவே பெற்றோர்களும் இணையத்தின் தன்மைகளை அறிந்து தங்கள் குழந்தைகளுக்கு இணையத்தின் சாதக பாதகங்களை கற்றுத்தருதலும், கண்காணிக்கவும் செய்வதும் அவசியம் என்கின்றர் சமூகநல வல்லுனர்கள்.
No comments:
Post a Comment
Thank you for using this blog.